முன்னுரை
அலைகடல் புவி அனைத்திலும் இதுபோது (1945) சற்றேறக்குறைய இருநூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்கின்றனர் என அறிகின்றோம். இவை, அளவில்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் ஆக்கி, அளித்துத் துடைத்து மறைத்து அருளும் வல்ல இறைவன் படைப்புக்கு உட்பட்டதாயிருந்தும், நான்கு வகுப்பும் அதில் பல பிரிவும் உயர்வு தாழ்வும் அதனால் மன மாற்றங்களும் கொண்டு ஒற்றுமையின்றி அல்லலுற்று வாழ்வது, குமரி முதல் பனிமலை (இமயம்) வரையுள்ள இந்நாட்டில் அல்லாது மற்றையைத் தேசங்களில் இல்லை என்பதை உலகின் பல பாகங்களைச் சிறிது நோக்கியவர்களுங்கூட அறிவர்.
ஆறறிவுப் பிறவியாம், மக்கள் குழுவினர் அன்புடமை கொண்டு அளவளாவி ஒன்றுபட்டு வாழ்வதற்கு இந்நாட்டிலுள்ள வகுப்புப் பாகுபாடுகள் ஏற்றதல்லாதனவாக இருக்க வகுப்பைப் பற்றிய வரலாறுகளும் ஆராய்ச்சி விளக்கங்களும் வேண்டுவதேயில்லையே எனின், இதுபோதுள்ள குமரிக்குத் தென்பால் இரண்டாயிரம் மைலுக்கு (3200 கி.மீ.) அப்பாலும் பனிமலை (இமயம்) வரையும் உள்ள பெருநிலப் பரப்பில், அன்பை அடிப்படையாய்க் கொண்டு ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழ் நிலத்தில், அயல் புலத்தவர் குடியேற்றத்தாலும் மொழிமாற்றத்தாலும் மொழிச்சிதைவாலும் உண்டு பண்ணப் பட்ட பேதத்தாலும், வகுப்புப் பாகுபடுகள் மிக விரிந்து, அவைகட்குச் சான்றாக இயற்றப் பட்ட வரலாற்று நூல்களும் மலிந்து, மக்கள் உள்ளத்தில் ஊறி, உண்மை காண இயலாத நிலையில், மக்களை அல்லலுக்குள்ளாகி இருப்பதைக் கூடுமான வரை வகுப்புப் பாகுபாடுகள் இந்த இந்த அளவில் உள்ளது என்பதைக் காட்ட வேண்டிய அளவில் இருப்பதற்கு இணங்கவும், நமது வரலாறு வேண்டுமெனக் கேட்ட பல நண்பர்கள் விருப்பத்திற்கு இணங்கவும், நமது வரலாறு என்பதைத் தெரிந்த அளவில் சுருக்கமாகக் கூற முன் வந்துள்ளேன்.
குல வரலாற்றை நான் அருப்புக்கோட்டையில் இருந்த காலத்தில் கி.பி. 1920 இரௌத்திரி சித்திரை 26ம் நாள் ஜமீன் பேரையூரில் கூடிய 42 ஊர் உறவின் முறைக் கூட்டத்தில் வரலாறு என்பது பற்றிக் கூறினேன். 1920ல் மதுரையில் 42 ஊர் துளுவ வேளாள வாலிபர் சங்கம் எனவும் 1924ல் 42 ஊர் துளுவ வேளாளர் சங்கம் எனவும் நிறுவி வெளியீடுகள் மூலம் சிறிது விளக்கி வந்தாலும் தமிழ்நாடு முழுமைக்கும் பொதுவாக துளுவ வேளாள மகாஜன சங்கம் என 1932ல் நிறுவிய பின்னர் சில திருத்தங்களுடன் 1933 ஸ்ரீமுக ஆண்டில் துளுவ வேளாளர் வரலாறு என அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டேன்.
பின்னர் இரண்டாம் பதிப்பு வெளியிட வேண்டுமெனப் பல நண்பர்கள் விரும்புவதாலும் 13-5-1945 பார்த்திப ஆண்டு சித்திரைத் திங்கள் 31-ம் நாள் திருநெல்வேலி குரிச்சியில் துளுவ வேளாள வாலிபர் சங்கத்தின் திறப்பு விழாவில் தலைமை வகித்தபோது அச்சங்கத்தார்கள் ரூ இருபத்தி ஒன்று பணமுடிப்பளித்து குல வரலாறு இரண்டாம் பதிப்பு அச்சிட்டுத்தரக் கேட்டு வேண்டியதாலும் இரண்டாம் பதிப்பு அச்சிட்டு வெளியிட முன் வந்துள்ளேன்.
முதற்பதிப்பு செப்பேட்டுப் பட்டயத்தையும் வேளாள புராணத்தையும் ஆதரவு கொண்டு வெளியிடப்பெற்றது. இது போது பகுத்தறிவு விஞ்ஞான வளர்ச்சி பெற்று வரும் காலப்போக்குக்கிணங்க உண்மை காணும் கால ஆராய்ச்சி நூல்களைத் தழுவி எனது அறிவின் செயலுக் கெட்டிய வரை வரலாறு எழுதி வெளியிடுகின்றேன். பேரறிவினனான இறைவன் துணை புரிக,